
ஒன்றவன் தானே இரண்டவன் இன்அருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ்உம்பம்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந்து எட்டே.
பொருள் : இறைவன் ஒருவனே, அவன் சிவன் சக்தி என்று இரண்டும் ஆனவன், முத்தொழில் புரிவதில் மூன்றானவன், நான்மறை உணர்ந்தவன், ஐந்தொழில் புரிபவன், ஆறு சமயங்களாக விரிந்தவன், ஏழு உலகங்களிலும் இருப்பவன், எட்டு குணங்களை உடையவன்.
முத்தொழில் – படைத்தல், காத்தல், அழித்தல் (பிரம்மன், விஷ்ணு, சிவன்)
நான்மறை – ரிக், யஜூர், சாம, அதர்வன வேதங்கள்
ஐந்தொழில் – படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் மற்றும் மறைத்தல்
ஆறு சமயப் பிரிவுகள் – சைவம் வைணவம் சாக்தம் கணபதிரம் சௌரம் கௌமாரம்
எட்டு குணங்கள் – தன் வயமாதல், தூய உடலாதல், இயற்கை உணர்தல், முற்றும் உணர்தல், பற்றற்று இருத்தல், பேரருள் நோக்கம், முடிவில்லாமை, எல்லை இல்லாமை